என்னைப் பற்றி...
வாசிப்பு உலகத்தின் முதல் நிலை படிக்கட்டுகளில் ஏற விரும்புகின்ற 'வாசிப்பு பழகுனர்' நான்.
என் தந்தையின் துண்டுதளால் தான், நான் முதலில் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் என்னை வாசிக்க சொன்ன முதல் புத்தகம் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்'
அதன் பின்னர்தான் வாசிப்பதை என் வாழ்கையின் மிக முக்கிய பகுதியாக செய்து கொண்டேன்.
தமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த புத்த்கங்களை வாசித்ததுண்டு, தமிழர்களின் கட்டட கலை எபோழுதும் என்னை கவர்ந்த விஷயம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவன் அதனாலோ, என்னவோ 'ஆண்டாள்' மேல் தீராத விருப்பம் உண்டு.
அவளுடைய 'குத்து விளக்கு', 'ஆழி மழை கண்ணனும் ' எபோழுதும் என்னை வசிகரித்தவை.
'எல்லே இளங்கிளியே' பாட்டை கூறி 'ஏலே' என்று நாம் தற்காலத்தில் புழங்கும் வார்த்தையை ( வட்டார வழக்கு ) பற்றி நண்பர்களிடம் பெருமைபட்டதுண்டு. அபிராமி பட்டரின் 'இடங்கொண்டு விம்மி' பாடல் எத்தனையோ நாட்கள் சிந்தையை நிறைத்ததுண்டு .
சாண்டில்யனை வெறித் தனமாய் வாசித்ததுண்டு. பாலாகுமரன் எழுதிய 'உடையார்' என்னை கவர்ந்து ஒரு சிறந்த படைப்பு. தி . ஜ வின் 'மோக முள்' பலமுறை வாசித்திருகின்றேன் . பாரதி யை படிக்காமல் தமிழ் படித்ததாய் சொல்லி கொள்ள முடியாது.
பள்ளி காலங்களில் எழுது வதில் தனித்த விருப்பம் இருந்தது. கவிதை என்ற பெயரில் நானும் கிறுக்கியதுண்டு. அனால் சில மன வியல் காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒன்றும் தவறாகி விடவில்லை. சீறிய சிந்தனை உள்ள மனிதன் அல்ல நான். மிகச் சாதரணமானவன்.
எனினும் என்றுமே என் வாசிப்பை கை விட்டதில்லை. எதிர்காலத்தில் என்னை ஒரு நல்ல 'வாசகனாய்' எனக்கு நானே அடையாளப் படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விரும்பும் ஒற்றை ஆசையாய் இருக்க முடியும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றேன்.
மற்ற வகையில் நான் ஒரு சாப்ட்வேர் தொழிலாளி. சென்னையில் வாசம். தாய் தந்தையர் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஒரு சகோதரி உண்டு, இளையவள். எனக்கு இலக்கிய விவாதங்களுக்கு கிடைத்த மிக நல்ல தோழி. பாரதியை பற்றியும், தி . ஜ வின் மோகமுள் பற்றியும், சாண்டில்யன் , கல்கி பற்றியும் மணிக் கணக்கில் பேசியது உண்டு.
என் துர்அதிர்சடமோ என்னோவோ, அவளைத் தவிர இலக்கிய சார்ந்த நண்பர்கள் எனக்கு அவ்வளவாய் அமையவும் இல்லை. சில நேரம் என் நண்பர்களிடம் எனக்கு தெரிந்த இலக்கியம் பேசி கஷ்டபடுதியதும் உண்டு.
ஒன்றை மட்டும் எம்போழுதும் மிகத் தீவரமாய் நம்பிவருகின்றேன் அது ' வாசிப்பும், இசை கேட்பதும் ' தான் என் வாழ்வில் நான் செய்து வரும் பயுன் உள்ள செயல்கள். மற்றவை அனைத்தும் அவை போக்கில் வந்து அவை போக்கிலயே அழிந்து போகும் நீர்க்குமிழிகள். வாசிப்பு என்னும் அலையோடு வந்து அலையோடே அழிந்துவிடுகின்றன.
'வாசித்த பொழுதுகள் மட்டுமே' என் வாழ்வில் வாழ்ந்து பொழுதுகளாய்க் கணக்கிடுகின்றேன். வாசிப்பு மட்டுமே என்னை 'இருத்தல்' என்ற நிலையில் இருந்து 'வாழ்தல்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றது.
அதனால் என்னால் இதை வசிக்கலாம், வேண்டாம் என்ற பாகுபாடின்றி எதையும் வசிக்க முடிகின்றது. தவறாகவும் இருக்கலாம். ஏன் என்றால்? குறிப்பட்ட சிலவற்றை மட்டும் முழுதாய் படித்து புலமை அடைதல் என்பது எனக்கு சாத்தியப்படாத போகிறதோ என்ற அச்சமுண்டு.
வலைகளின் முலமாய் பலவும் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றதே என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. பொழுது தான் கிடைப்பதில்லை.
புத்தகங்கள் என்னிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே விளங்குகிறது. பொதுவாக வேலைக்கான நேர்காணலில் 'உங்களை பற்றி சொல்லுங்கள்' என்று கேட்க படுவதுண்டு. இந்த கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்ட போதெல்லாம் என்னை பற்றியவைகளாய் இருப்பவைகள் எல்லாம் என்
வாசிப்பு பற்றியவைகளாய் மட்டுமே இருக்கின்றன.
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கியதின் தாக்கத்தால், மீண்டும் எழுத்தார்வம் உண்டாகி எழுதத்தொடங்கியுள்ளேன்.
மேலும் என் இசை குறித்த விருப்பங்களை எழுதினால் இந்த பத்தி மிக பெரியதாகிவிடும். இனி வரும் பகுதிகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோமே.
உங்கள் வாசிப்பு பயணம் தொடர மற்றும் இனிதாக என்னுடைய வாழ்த்துகள். உங்கள் பெயர் என்னவோ ?
ReplyDeleteமிக்க நன்றி ஷேக் சுல்தான் என் பெயர் 'சுந்தரவடிவேலன்'
ReplyDelete