Sunday, May 8, 2011

பிரியாவிடைகள்

  
பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
மெல்ல
உறிஞ்சப்பட்டு
நாவில் கசந்து ஊர்ந்து
தொண்டைகுழி வழி
எரிய எரிய இறங்கும் 
கடைசி மிடற்று மது
சில பிரியாவிடைகள்.

மஞ்சளாய்க் காய்ந்து
பின்னர் 
செம்மஞ்சளாய் 
மெல்ல மெல்ல
நிறமிழந்து
வெண்மையாய் மாறி
சனம் சனமாய்
இருளுக்குள் விழுந்துபோகும்
பகலின்
பிரியாவிடை.

மின்னலாகக் கீறி
வானம் உடைத்து
இடித்து அலறி
சோவெனக் கொட்டி
பெருகி 
ஓடி
ஓய்ந்து போனவை
சில பிரியாவிடைகள்.

இச்சித்து 
விரும்பி
அருந்தி
ஆசை ஆசையாய்
அருந்தியது 
மற்றவர் அறியாவண்ணம் 
நடித்து
மிச்சம் வாய்த்த
கோப்பையின்
கடைசி வாய் தேநீர்
போல
ருசிக்கமுடியாதவை
சில பிரியாவிடைகள்.

பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
பிரிவுகள்
ஒன்றே போலும்.

பிரிவு

பற்றி உறிஞ்சும் கோடையில் 
தரை
வெளி நோக்கிச் சிந்தும்
கானல் நீர்.

இல்லாத ஒன்றை
இழந்து இழந்து
இழந்து கொண்டே 
இருத்தல்.

2 comments:

  1. அருமையான கவிதைகள் !

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நன்றி சுழியம் அவர்களே! நடந்து பழகும் மழலைக்கு "வா, இன்னும் வா" என்ற ஊக்குவிப்பு மிக முக்கியமானது. அந்த தூண்டதலும் ஒரு வகையில் நடக்கும் தூரத்தை அதிகமாக்குகிறது!

    ReplyDelete