வாழ்வென்பது ஒரு இலக்கற்ற பயணம் தானே. இலக்குகளாக நாம் நினைப்பவை எல்லாம் நமது கற்பனைகள்.
நான் அதை அடைகிறேன், இதை அடைவதே என் லட்சியம் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் தான். ஏனென்றால் நாம் எவற்றை இலக்கென்று நினைக்கிறோம் அவற்றை அடைந்த பின்னும் கூட வாழ்க்கை எஞ்சும். அடையாவிட்டாலும் வாழ்வு தொடரும்.
வாழ்வு என்பது ஒரு பயணம். இங்கு பயணமே பிரதானம். பயணத்தின் இலக்கல்ல.
ஓடும் நதியைப்போல.
நதி நதியாய் இருப்பது ஓடும் வரையே. தொடங்கும் இடத்திலும் சென்று முடியும் இடத்திலும் நதி நதியாய் இருப்பதில்லை. கடலை அடைவதற்காக ஒன்றும் நதி பயணிப்பதில்லை. ஓடுவது நதியின் இயல்பு. ஓடும் வரையே நதி.
வாழ்வென்பது ஒரு தவம். தவத்திற்கும் இலக்கு என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருந்து, அதை நாம் அடைந்து விட்டால் அந்த புள்ளியில், இரண்டுமே முடிந்து விடும். தவமே தவத்தின் பயன். வாழ்தலே வாழ்வின் சிறப்பு.
இதைபோன்றதே வாசிப்பும். வசிப்பதால் நிகழ்வதென்ன? பயன் என்ன? என்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை.
வாசித்தலில் நாம் கற்பித்துக்கொள்ளும் இலக்குகள் தீர்ந்த பின்னும் வாசித்தல் எஞ்சும். அறிதல் என்பதற்கு முடிவில்லை.
ஓடும் நதி இருபக்க கரையையும் வளபடுத்தி செல்லுதல் போல. வாசித்தாலும் கூட வளப்படுத்தும், விசாலப்படுத்தும் நம் மனங்களையும், எண்ணங்களையும்.
வாசகனுக்கு கால, தூர பரிமானங்களில்லை. மனித மனம் என்பது கற்பனைகளால் எல்லா திசைகளிலும் விரிவடையும் கோளம் போல. அதை உந்தி விரிவடைய செய்யும் நல்ல இலக்கிய வாசிப்பு.
முடிவற்றது. இந்த விரிதல் இல்லை என்றால் சுவாரஸ்யம் இல்லை.
நல்ல இலக்கியம் ஒரு சுய விமர்சனமாக அமையக்கூடும். ஒரு கண்ணாடியைப் போல நம்மை நாமே கண்டுகொள்ள உதவும்.நம்மையே புறம் நின்று உள் நோக்க வாய்ப்பளிக்கும். தன்னை தானே நிர்வகித்துக் கொள்ளவும், ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் உதவும். எங்கோ இருக்கும் ஒரு ஆசிரியன் எழுதும் இரு வரிகள் நம்மை பற்றியதாய் அமைந்து போவது வியப்புக்குரியதல்லவா?
முற்றும்.
wow!!! really a good one...
ReplyDelete