Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Wednesday, March 30, 2011

கூர்வாள்

கூரிய வாள் ஒன்று உண்டு
என்னிடம் 

அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.

என் இதயத் தசைக்கோளங்களுக்குள் 
சொருகி

ஒரு புறம் குத்தி
மறு புறம் வெளிவந்திருக்கும் 
கூர் முனையில் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
தட் தட் என
உதிரத் துளிகள்

தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொரு
தாளம் போல.





Friday, October 1, 2010

கரிய நிறத்து ஒரு தாகம்

வேகமாய்
வேகமாய்
ஓடிகொண்டிருக்கிறேன்.

கரிய நிறத்தொரு
வனத்தினுள்
கருமையாய் நானும்

கருமையின்
அடர்த்தி வித்தியாசத்தால்
உணரும்
வெற்றிடமும்
அதனுள்
நிறைந்த
கரிய நிறத்து
பருப்பொருள் களும்

கருமையாய்ச்
செடிகளும்
புதர்களும்
கொடிகளும்

கரிய நிறத்தின்
வேர்கள்
மற்றொரு கரிய நிறத்தின்
மரக்கால்கள்
நிற்கும் வனம்

கருமையின்
வெவேறு ஒளி
வித்தியாசங்களில்
கிளைகளும்
இலைகளும்
பூக்களும் கூட

பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி
ஆதி அடர்த்தியான
கருமை

எல்லாம் உள் இழுக்கும்
உருஞ்சிக்கொள்ளும்
கருமை

எல்லாம்
தீர்ந்து
காலமென்ற
பிரக்ஞை
அற்ற
மையபுள்ளியின் 
கருமை

மீண்டும்
முதல்
ஒளி தோன்றும்
யோனிக் கீறலின்
கருமை

மீஎண்டும்
மீண்டும்
பிரபஞ்சம்
தோன்றி மறையும்
கருமை

காலத்தின்
நீட்சிபோல
ஆதி வனத்தின்
கரிய வழித்தடத்தில்
கடந்து
போய்க்கொண்டிருக்கிறேன்

கருமையாய்
எதை நோக்கி
கருமையையா?
வெறுமை என்ற
கருமையை
நோக்கியே

உடலின்
நீர் முழுதும்
வியர்வையாய்
கரிய மனிதுளிகலென
உருண்டு  இறங்கும்

உள்  நாக்கு
வரை
உலர்ந்து
போகும்
தாகம்

தகிக்கின்ற
தாகம்

கரிய
திரவமாய்
நீர்
கண்டால்
அள்ளிப் பருக
தவிக்கும்
தாகம்

தீராத
கருமை
போல
தீராத
தாகம்

அதி
மையத்தின்
முதர்ச்சலனம்
உண்டாக்கிய
தாகம்

பருகித்தீராத
தாகம்
பருகும்
பொருளும்
என்னைப்
பருகிய
பின்னும்

கனவுக்குள்
உதிக்கும் தாகம்
கனவு கலையும் மட்டும்
தீர்வதில்லை!

Friday, September 10, 2010

முல்லைப் பூவென........

முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை 
என் முகம் கீறிப் போனதென்ன? 

காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்
காணத் தவித்ததெந்தன் பிழையோ? 

உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன் 
உயிரில் கலந்துவிட்ட பின்னே

நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண் 
உறக்கத்தில் வந்த கனவோ?

நின் செல்லக் கரம்பிடித்துக்  கொண்டு  - நான்
செல்வேன் தூர தூரமென்று 

வண்ணக் கனவு கண்டிருந்தேன் - நான் 
காத்திருந்தேனடி பெண்ணே!

வண்ண ஓவியத்தில் நீர் விழுந்தே   எந்தன் 
கனவு கலைந்தது கண்டேன் !

வானம் தீரும் வரையும் என் - வாழ்வு 
தீரும் வரையும் உனக்காக 

காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று  - நான் 
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று.



Friday, August 27, 2010

யாசகன்

 யாசகன்
என் யாசகம் எல்லாம்
உன்னிடம் மட்டும்
தான்!

என்னை கண்டவுடன்
நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை!

உன்னை காணும்தொரும்
என் விழி நனைக்கும்
கண்ணீர் துளி!

உன் விரல் பிடித்த நடை!
உன் தோள் சாய்ந்த உறக்கம்!

உன்னோடு உரையாடியும்
தீராத வார்த்தைகள்!
பரிமாறித் தீராத
அன்பு !


என் மரணத்திற்காய் 
நீ விடும் கண்ணீர்!

மரணிக்கும் பொது
நான் காண
உன் முகம் !

இவை என் யாசகங்கள்!
யாசகம் ஒரு தவம்!

நான் யாசித்து இருப்பதற்காகவே
யாசிக்கிறேன்!
தரப்படும் என்பதற்காக அல்ல!

நான்
யாசகன்

Friday, July 23, 2010

எதை எழுதுவேன் நான்!

எழுது எழுது
என்கிறாய்
என்ன எழுதுவேன்
நான்.

பிறந்த குழந்தையின்
மூடிய கரங்களுக்குள்
விரியும் பிரபஞ்ச வரிகள்!i

இருதுண்டாய் வானம்
கிழித்து மேகங்கள்
இடும் மின்னல் வரிகள்!

அடிவானம் கடலோடு
முத்தமிட்டு விளையாடும்
தொலைதூர ஒற்றை வரி!

கரையோடு மோதுமலை
எழுதி எழுதி அழிக்கும்
வெண் நுரை வரிகள்!

பாலருந்தும் மழலை
வாயோரம் ஒழுகிவரும்
அமுதப் பால் வரிகள்!

நெடுநாளாய்க் காணாது
கண்ட போது அன்னை
சிந்தும் கண்ணீர் வரிகள்!

இவை எழுத என்னிடம்
மொழிகள் இல்லை
எதை எழுதுவேன்
நான்!

Friday, April 9, 2010

கவிதை : என்னை விலகி நில்....

போர்வையின் விலகளுக்குள்
நுழையும் பனி என நீ
தீண்டும்தோறும் தீண்டும்தோறும்
விழி திறக்கிறேன் நான் !

பனியாக நீ வெளி நிற்க
உறங்குகிறேன்
உள்ளே நான்!

உன்னை விலக்கிவிட்டதாய்
நினைக்கும் தோறும்
நிறைகின்றாய் என்னுள்

உன்னை விலக்குதல்
என் பாவனை
என்னை விலகுதல்
உன் பாவனை

அறிவோம் நாம்!
உள்ளே என்
அச்சமற்ற உறக்கமும்
வெளியே நீ
இருக்கும் காரணத்தால்...

இருந்தும் ஆடுகின்றோம்
மாயமான ஒரு திரையிட்டு

உன்னை விலக்குதல் போல்
உன்னுள் சிறையாகிறேன் நான் !
என்னை விலகுதல் போல்
என்னுள் நிறைகின்றாய் நீ !

Tuesday, December 22, 2009

கவிதை 3: பக்கத்தில் நீ...

நிலவில்லா இரவு
ஒரேஒரு விண்மீன்
சலசலக்கும் ஓடை
பக்கத்தில் நீ.

தூரத்து விளக்கு
கரைதீண்டும் அலை
ஒற்றைப் படகு
பக்கத்தில் நீ.

அதிகாலை வெளிச்சம்
அணில்பேசும் சத்தம்
நம்வீட்டுக் கொல்லை
பக்கத்தில் நீ.

முற்றத்துக் கோலம்
முல்லைப்பூப் பந்தல்
மேகத்தின் முதற்துளி
பக்கத்தில் நீ.


எதிர்பார்த்த முத்தம்
எதிர்பாராக் கண்ணீர்
அரவணைக்க நான்
தோள்சாய நீ!