Friday, September 10, 2010

முல்லைப் பூவென........

முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை 
என் முகம் கீறிப் போனதென்ன? 

காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்
காணத் தவித்ததெந்தன் பிழையோ? 

உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன் 
உயிரில் கலந்துவிட்ட பின்னே

நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண் 
உறக்கத்தில் வந்த கனவோ?

நின் செல்லக் கரம்பிடித்துக்  கொண்டு  - நான்
செல்வேன் தூர தூரமென்று 

வண்ணக் கனவு கண்டிருந்தேன் - நான் 
காத்திருந்தேனடி பெண்ணே!

வண்ண ஓவியத்தில் நீர் விழுந்தே   எந்தன் 
கனவு கலைந்தது கண்டேன் !

வானம் தீரும் வரையும் என் - வாழ்வு 
தீரும் வரையும் உனக்காக 

காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று  - நான் 
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று.



Friday, August 27, 2010

யாசகன்

 யாசகன்
என் யாசகம் எல்லாம்
உன்னிடம் மட்டும்
தான்!

என்னை கண்டவுடன்
நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை!

உன்னை காணும்தொரும்
என் விழி நனைக்கும்
கண்ணீர் துளி!

உன் விரல் பிடித்த நடை!
உன் தோள் சாய்ந்த உறக்கம்!

உன்னோடு உரையாடியும்
தீராத வார்த்தைகள்!
பரிமாறித் தீராத
அன்பு !


என் மரணத்திற்காய் 
நீ விடும் கண்ணீர்!

மரணிக்கும் பொது
நான் காண
உன் முகம் !

இவை என் யாசகங்கள்!
யாசகம் ஒரு தவம்!

நான் யாசித்து இருப்பதற்காகவே
யாசிக்கிறேன்!
தரப்படும் என்பதற்காக அல்ல!

நான்
யாசகன்

Saturday, July 24, 2010

வாசிப்பின் பயன் என்ன? -2



வாழ்வென்பது ஒரு இலக்கற்ற பயணம் தானே. இலக்குகளாக நாம் நினைப்பவை எல்லாம் நமது கற்பனைகள்.

நான் அதை அடைகிறேன், இதை அடைவதே என் லட்சியம் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் தான். ஏனென்றால் நாம் எவற்றை இலக்கென்று நினைக்கிறோம் அவற்றை அடைந்த பின்னும் கூட வாழ்க்கை எஞ்சும். அடையாவிட்டாலும் வாழ்வு தொடரும்.

வாழ்வு என்பது ஒரு பயணம். இங்கு பயணமே பிரதானம். பயணத்தின் இலக்கல்ல.
ஓடும் நதியைப்போல.

நதி நதியாய் இருப்பது  ஓடும் வரையே. தொடங்கும் இடத்திலும் சென்று முடியும் இடத்திலும் நதி  நதியாய் இருப்பதில்லை. கடலை அடைவதற்காக ஒன்றும் நதி பயணிப்பதில்லை. ஓடுவது நதியின் இயல்பு. ஓடும் வரையே நதி.

வாழ்வென்பது ஒரு தவம். தவத்திற்கும்  இலக்கு என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருந்து, அதை நாம் அடைந்து விட்டால் அந்த புள்ளியில், இரண்டுமே முடிந்து விடும். தவமே தவத்தின் பயன். வாழ்தலே வாழ்வின் சிறப்பு.

இதைபோன்றதே வாசிப்பும். வசிப்பதால் நிகழ்வதென்ன? பயன் என்ன? என்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை.

வாசித்தலில் நாம் கற்பித்துக்கொள்ளும் இலக்குகள் தீர்ந்த பின்னும் வாசித்தல் எஞ்சும். அறிதல் என்பதற்கு முடிவில்லை. 

ஓடும் நதி இருபக்க கரையையும் வளபடுத்தி செல்லுதல் போல. வாசித்தாலும் கூட வளப்படுத்தும், விசாலப்படுத்தும் நம் மனங்களையும், எண்ணங்களையும்.

வாசகனுக்கு கால, தூர  பரிமானங்களில்லை. மனித மனம் என்பது கற்பனைகளால் எல்லா திசைகளிலும் விரிவடையும் கோளம் போல. அதை உந்தி விரிவடைய செய்யும் நல்ல இலக்கிய வாசிப்பு.

முடிவற்றது. இந்த விரிதல் இல்லை என்றால் சுவாரஸ்யம் இல்லை.

நல்ல இலக்கியம் ஒரு சுய விமர்சனமாக அமையக்கூடும். ஒரு கண்ணாடியைப்  போல  நம்மை நாமே கண்டுகொள்ள உதவும்.நம்மையே புறம் நின்று உள் நோக்க வாய்ப்பளிக்கும். தன்னை தானே நிர்வகித்துக் கொள்ளவும், ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் உதவும். எங்கோ இருக்கும் ஒரு ஆசிரியன் எழுதும் இரு வரிகள் நம்மை பற்றியதாய் அமைந்து போவது வியப்புக்குரியதல்லவா?

முற்றும்.