Wednesday, October 13, 2010

எனக்கு பிடித்த குறள்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று


'யாரைவிடவும்  உன் மேல் காதல்  அதிகம் என்றேன் நான்
யாரை விடவும் ?யாரை விடவும் ?என்றால் அவள் '



Friday, October 1, 2010

கரிய நிறத்து ஒரு தாகம்

வேகமாய்
வேகமாய்
ஓடிகொண்டிருக்கிறேன்.

கரிய நிறத்தொரு
வனத்தினுள்
கருமையாய் நானும்

கருமையின்
அடர்த்தி வித்தியாசத்தால்
உணரும்
வெற்றிடமும்
அதனுள்
நிறைந்த
கரிய நிறத்து
பருப்பொருள் களும்

கருமையாய்ச்
செடிகளும்
புதர்களும்
கொடிகளும்

கரிய நிறத்தின்
வேர்கள்
மற்றொரு கரிய நிறத்தின்
மரக்கால்கள்
நிற்கும் வனம்

கருமையின்
வெவேறு ஒளி
வித்தியாசங்களில்
கிளைகளும்
இலைகளும்
பூக்களும் கூட

பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி
ஆதி அடர்த்தியான
கருமை

எல்லாம் உள் இழுக்கும்
உருஞ்சிக்கொள்ளும்
கருமை

எல்லாம்
தீர்ந்து
காலமென்ற
பிரக்ஞை
அற்ற
மையபுள்ளியின் 
கருமை

மீண்டும்
முதல்
ஒளி தோன்றும்
யோனிக் கீறலின்
கருமை

மீஎண்டும்
மீண்டும்
பிரபஞ்சம்
தோன்றி மறையும்
கருமை

காலத்தின்
நீட்சிபோல
ஆதி வனத்தின்
கரிய வழித்தடத்தில்
கடந்து
போய்க்கொண்டிருக்கிறேன்

கருமையாய்
எதை நோக்கி
கருமையையா?
வெறுமை என்ற
கருமையை
நோக்கியே

உடலின்
நீர் முழுதும்
வியர்வையாய்
கரிய மனிதுளிகலென
உருண்டு  இறங்கும்

உள்  நாக்கு
வரை
உலர்ந்து
போகும்
தாகம்

தகிக்கின்ற
தாகம்

கரிய
திரவமாய்
நீர்
கண்டால்
அள்ளிப் பருக
தவிக்கும்
தாகம்

தீராத
கருமை
போல
தீராத
தாகம்

அதி
மையத்தின்
முதர்ச்சலனம்
உண்டாக்கிய
தாகம்

பருகித்தீராத
தாகம்
பருகும்
பொருளும்
என்னைப்
பருகிய
பின்னும்

கனவுக்குள்
உதிக்கும் தாகம்
கனவு கலையும் மட்டும்
தீர்வதில்லை!

Friday, September 10, 2010

முல்லைப் பூவென........

முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை 
என் முகம் கீறிப் போனதென்ன? 

காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்
காணத் தவித்ததெந்தன் பிழையோ? 

உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன் 
உயிரில் கலந்துவிட்ட பின்னே

நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண் 
உறக்கத்தில் வந்த கனவோ?

நின் செல்லக் கரம்பிடித்துக்  கொண்டு  - நான்
செல்வேன் தூர தூரமென்று 

வண்ணக் கனவு கண்டிருந்தேன் - நான் 
காத்திருந்தேனடி பெண்ணே!

வண்ண ஓவியத்தில் நீர் விழுந்தே   எந்தன் 
கனவு கலைந்தது கண்டேன் !

வானம் தீரும் வரையும் என் - வாழ்வு 
தீரும் வரையும் உனக்காக 

காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று  - நான் 
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று.



Friday, August 27, 2010

யாசகன்

 யாசகன்
என் யாசகம் எல்லாம்
உன்னிடம் மட்டும்
தான்!

என்னை கண்டவுடன்
நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை!

உன்னை காணும்தொரும்
என் விழி நனைக்கும்
கண்ணீர் துளி!

உன் விரல் பிடித்த நடை!
உன் தோள் சாய்ந்த உறக்கம்!

உன்னோடு உரையாடியும்
தீராத வார்த்தைகள்!
பரிமாறித் தீராத
அன்பு !


என் மரணத்திற்காய் 
நீ விடும் கண்ணீர்!

மரணிக்கும் பொது
நான் காண
உன் முகம் !

இவை என் யாசகங்கள்!
யாசகம் ஒரு தவம்!

நான் யாசித்து இருப்பதற்காகவே
யாசிக்கிறேன்!
தரப்படும் என்பதற்காக அல்ல!

நான்
யாசகன்

Saturday, July 24, 2010

வாசிப்பின் பயன் என்ன? -2



வாழ்வென்பது ஒரு இலக்கற்ற பயணம் தானே. இலக்குகளாக நாம் நினைப்பவை எல்லாம் நமது கற்பனைகள்.

நான் அதை அடைகிறேன், இதை அடைவதே என் லட்சியம் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் தான். ஏனென்றால் நாம் எவற்றை இலக்கென்று நினைக்கிறோம் அவற்றை அடைந்த பின்னும் கூட வாழ்க்கை எஞ்சும். அடையாவிட்டாலும் வாழ்வு தொடரும்.

வாழ்வு என்பது ஒரு பயணம். இங்கு பயணமே பிரதானம். பயணத்தின் இலக்கல்ல.
ஓடும் நதியைப்போல.

நதி நதியாய் இருப்பது  ஓடும் வரையே. தொடங்கும் இடத்திலும் சென்று முடியும் இடத்திலும் நதி  நதியாய் இருப்பதில்லை. கடலை அடைவதற்காக ஒன்றும் நதி பயணிப்பதில்லை. ஓடுவது நதியின் இயல்பு. ஓடும் வரையே நதி.

வாழ்வென்பது ஒரு தவம். தவத்திற்கும்  இலக்கு என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருந்து, அதை நாம் அடைந்து விட்டால் அந்த புள்ளியில், இரண்டுமே முடிந்து விடும். தவமே தவத்தின் பயன். வாழ்தலே வாழ்வின் சிறப்பு.

இதைபோன்றதே வாசிப்பும். வசிப்பதால் நிகழ்வதென்ன? பயன் என்ன? என்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை.

வாசித்தலில் நாம் கற்பித்துக்கொள்ளும் இலக்குகள் தீர்ந்த பின்னும் வாசித்தல் எஞ்சும். அறிதல் என்பதற்கு முடிவில்லை. 

ஓடும் நதி இருபக்க கரையையும் வளபடுத்தி செல்லுதல் போல. வாசித்தாலும் கூட வளப்படுத்தும், விசாலப்படுத்தும் நம் மனங்களையும், எண்ணங்களையும்.

வாசகனுக்கு கால, தூர  பரிமானங்களில்லை. மனித மனம் என்பது கற்பனைகளால் எல்லா திசைகளிலும் விரிவடையும் கோளம் போல. அதை உந்தி விரிவடைய செய்யும் நல்ல இலக்கிய வாசிப்பு.

முடிவற்றது. இந்த விரிதல் இல்லை என்றால் சுவாரஸ்யம் இல்லை.

நல்ல இலக்கியம் ஒரு சுய விமர்சனமாக அமையக்கூடும். ஒரு கண்ணாடியைப்  போல  நம்மை நாமே கண்டுகொள்ள உதவும்.நம்மையே புறம் நின்று உள் நோக்க வாய்ப்பளிக்கும். தன்னை தானே நிர்வகித்துக் கொள்ளவும், ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் உதவும். எங்கோ இருக்கும் ஒரு ஆசிரியன் எழுதும் இரு வரிகள் நம்மை பற்றியதாய் அமைந்து போவது வியப்புக்குரியதல்லவா?

முற்றும்.


Friday, July 23, 2010

எதை எழுதுவேன் நான்!

எழுது எழுது
என்கிறாய்
என்ன எழுதுவேன்
நான்.

பிறந்த குழந்தையின்
மூடிய கரங்களுக்குள்
விரியும் பிரபஞ்ச வரிகள்!i

இருதுண்டாய் வானம்
கிழித்து மேகங்கள்
இடும் மின்னல் வரிகள்!

அடிவானம் கடலோடு
முத்தமிட்டு விளையாடும்
தொலைதூர ஒற்றை வரி!

கரையோடு மோதுமலை
எழுதி எழுதி அழிக்கும்
வெண் நுரை வரிகள்!

பாலருந்தும் மழலை
வாயோரம் ஒழுகிவரும்
அமுதப் பால் வரிகள்!

நெடுநாளாய்க் காணாது
கண்ட போது அன்னை
சிந்தும் கண்ணீர் வரிகள்!

இவை எழுத என்னிடம்
மொழிகள் இல்லை
எதை எழுதுவேன்
நான்!

Saturday, July 3, 2010

வாசிப்பின் பயன் என்ன?

இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

http://www.jeyamohan.in/?p=7290

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இந்த தலைப்பில் ஒரு இடுகை கண்டேன். அன்பர் ஒருவரின் கடிதம் அது.

நம்மை போன்ற பலரும் நமக்குள்ளும் மற்றவரோடும் பலமுறை விவாதித்திருக்கும் விஷயம் தான்.

வாசிப்பின் தொடக்க காலங்களில், வாசிப்பு என்னும் பெருஞ்சமுத்திர கரையில் நின்று கொண்டு, என்னை நனைத்து கொண்டிருந்த அலையோடும், நுரையோடும் உறவாடி கொண்டிருந்த போதுகளில், எனக்குள்ளே விவாதித்தவைகளைத் தான் அந்த கடிதத்தில் கண்டேன்.

இன்று அதை தொட்ட என் மீள் சிந்தனை...

இலக்கிய வாசிப்பு எதற்காக இல்லை வாசிப்பு என்பது எதற்காக? எதை நோக்கிய பயணம் இது?

இலக்கென்ன?

இதே கேளிவிகளை தான் வாழ்வோடும் தொடர்பு படுத்த முடிகிறது.

வாழ்வு என்பது எதை நோக்கி? இல்லை எதற்காக?

தொடரும் .....


வாசிப்பு

Monday, June 14, 2010

சமீபத்தில் ரசித்த கவிதை - படித்ததில் பிடித்தது

சமீபத்தில் ரசித்த கவிதை.. படித்ததில் பிடித்தது

காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
- தேவதச்சன்.

ராமகிருஷ்ணன் அவர்களின் வலைதளத்தை தொடர்ந்து வசிக்கும் பழக்கம் உண்டு. அதில் வாசிக்க கிடைத்தது இந்த கவிதை. அழ்ந்த பொருள் கொண்டது இல்லையா? உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

http://sramakrishnan.com/view.asp?id=392&PS=1

Friday, April 9, 2010

கவிதை : என்னை விலகி நில்....

போர்வையின் விலகளுக்குள்
நுழையும் பனி என நீ
தீண்டும்தோறும் தீண்டும்தோறும்
விழி திறக்கிறேன் நான் !

பனியாக நீ வெளி நிற்க
உறங்குகிறேன்
உள்ளே நான்!

உன்னை விலக்கிவிட்டதாய்
நினைக்கும் தோறும்
நிறைகின்றாய் என்னுள்

உன்னை விலக்குதல்
என் பாவனை
என்னை விலகுதல்
உன் பாவனை

அறிவோம் நாம்!
உள்ளே என்
அச்சமற்ற உறக்கமும்
வெளியே நீ
இருக்கும் காரணத்தால்...

இருந்தும் ஆடுகின்றோம்
மாயமான ஒரு திரையிட்டு

உன்னை விலக்குதல் போல்
உன்னுள் சிறையாகிறேன் நான் !
என்னை விலகுதல் போல்
என்னுள் நிறைகின்றாய் நீ !

Thursday, January 7, 2010

குருவே! உன்னைச் சரணடைந்தேன்.....

இது ஒரு சரணாகதம்.....

உன் திருவடியைத் தேடி வருகின்றேன். பிறந்த ஒளி இயல்பாய் எப்பக்கமும் ஓடுதல் போல. கற்றில்லாது அடைக்கப்பட்ட வெற்றிடம் பட்டேன்ற திறக்கப்படும் போது உள்ளே சீரினுழையும் காற்றைப்போல். பள்ளத்தை நோக்கி விரைந்து செல்லும் நதியைப்போல. மலை முகட்டை அடைந்த நதி வெள்ளம் அடிவாரம் நோக்கி விழுகின்ற அருவி போல. உன் திருவடி நோக்கி விழுந்து வழிகின்றேன் நான் என்ற அகம் திறந்து.

நான் நல்லவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீயவன் என்ற இறுமாப்பு வேசங்களைக் களைந்து விட்டு. நான் எதுவாக இருக்கிறேனோ அதுவாகவே வருகின்றேன் உன் திருவடி சேர. ஏனெனில் அந்த வேசங்களைக் கடந்து உண்மையான எனக்குள் நுழைய வலியவன் நீ.பசித்தப் பிள்ளை தேடும் தாய் என நீ. உனக்கு முன்னால் வேசங்கள் பருதி கண்ட பனி.

நான் எனக்காய் இட்ட வேசங்கள், உலகனிக்காக இட்ட வேசங்கள் எல்லாம் களைந்து வருகின்றேன். நான் என ஆன என் மனம் உன் திருவடியில் விழுந்து வழிகிறது. பொய்யான மாயா பூச்சுகள் இல்லை, அறுப்பட்ட சதை துண்டம் போல் என்னை இழந்து அதுவாய் விழுகிறது மனம் உன் பதங்களில்.

அதன் கள்ளத்தனங்களோடு, திரிபுகளோடு, அச்சங்களோடு , இச்சைகளோடு உன் திருவடியினை தழுவுகின்றது. இன்னும் இன்னும் என்ற ஆசைகளோடு, ஒவ்வொரு ஆசையும் நீ எனக்காய் ஆக்கி தந்த பின்னும், இன்னும் இன்னும் என ஊரும் வற்றாத மனற்கேனியின் நீர் போல உதிக்கும் பேராசைகளோடு வருகின்றது. அது விழுந்து வழிகையில் , நிணமும், சலமும், கழிவுமாக வழிந்து உன்திருவடியில் படுகின்றன. ஆயினும் உன் சேவடி, நீர் ஒட்டாத தாமரை இலை என என் நிணமும்,கழிவுமான மனம் ஒட்டாமல் மணம் கொண்ட மலர் போல மலர்கின்றது ஒவ்வொரு நொடியும். அந்த நின மனம் வழிந்தது உன் திருவடிக்கு மலர்கள் தழுவுதல் எனத் தோன்றுமோ?

உன் திருவடியின் ஒவ்வொரு அசைவும், இந்த பிரபஞ்சத்தின் முதல் அசைவையே எனக்கு நினைவுறுத்தும். இந்த நொடியில் நீ என் ஸ்தூல உடலால் தீண்ட முடியாத தூரத்தில் இருக்கிறாய். என் மனம் உன்னை நோக்கி வந்ததை, உன்னோடு தொடர்பு கொண்டதை நீ அறிந்திருப்பாய். ஏனென்றால், உன் மனம், நீ தான் பௌதீகம் அளந்தறியும் இந்த தூரங்களைக் கடந்து வந்து என் மனதை இயக்கி உனக்குள் வழியச் செய்கிறாய். பொறு! உன் மனம் எங்கோ என் உடலால் தொட இயலாத தூரத்தில் இருக்கின்றதா ? இல்லை. நான் உன் மனதின் உள்தான் இருக்கிறேன்.

உன்னிடம் யாசிக்க என்னிடம் எத்தனையோ ஆசைகள் உண்டு. அவற்றை பூர்த்தியும் நீ செய்வாய். செய்த பின்னும் குறைவாக கேட்டதாக தோன்றும் எனக்கு. இல்லையன்றால், புதிது புதிதாய் ஆசைகள் பிறக்கும். நீ எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றாய். என்னை விட உனக்குத் தெரியும் எனக்கு எது சரியென்று.

தாயிடம் கூட பசியென்று சொல்ல வேண்டும். நீ தாயினும் சிறந்த தயாவாணன். நீ அறிவாய் அனைத்தும்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹா

குரு சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா !