Friday, August 12, 2011

திரை




உறுமி நகரும் ஜன்னலின்
கண்ணாடிப் பரப்பில்

புலப்படாத தூரிகை ஒன்று
வரைந்து நகர்கிறது
உயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும் 
ஒற்றைக் கோட்டினை
அதன் கீழும் மேலும் 
ஒரே நிறம் 

Tuesday, August 2, 2011

இழந்த சொற்கள்



முடிவிலிகளின் இடைக்கிடக்கும்
காலத்தின் ஒரு தூய புள்ளியில் 
நிகழ்ந்த சந்திப்பு

பெயர்தெரியா மரத்தின் கிளையில்
பேசி இருந்தது வனக் குருவி 
தன இனத்தின்
எப்போதைக்குமான 
ஒரே மொழியின் சொற்களை

மானுட பாசைகளின் சொற்கள்  
அவிந்து மிஞ்சிய 
மெளனத்தில் 
மீண்டும் ஒருமொழி துவங்கினால்
புரியக் கூடும்

Sunday, July 24, 2011

அவர்களுக்கு மட்டுமான காரணங்கள்!



அவர்களைப் போகவிடுங்கள்
அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.

பேருந்தோ புகை வண்டியோ
இவர்கள் பிடிக்கக் காத்திருக்கலாம்
குழந்தைகள்
தொந்தரவுபட்டிருக்கலாம்
மூச்சு முட்டி இருக்கலாம்
முழங்காலோ
நேரமாய் நின்றுகொண்டிருந்ததால் குதிகாலோ
வின்வின்னென்று குத்தி வலித்திருக்கலம்
முன்னிருப்பவர் பின்னிருப்பவரின்
வியர்வையோ, வாசனை திரவியத்தின் வாடையோ
குமட்டியிருக்கலாம்
இயற்கை உபாதையோ
பசியோ இருந்திருக்கலாம்

உங்களுக்கு இவற்றில் எதுவும் இல்லை அல்லவா?
அவர்களைப் போகவிடுங்கள்

வைகுண்ட வாசலே திறந்தாலும்
துவார பாலகர்களிடம்
செருப்புக்கு காவலிருக்குச் சொல்லிவிட்டு அச்சப்படும்
முன் ஜாக்கிரதை வாதிகள்
அவர்களை போகவிடுங்கள்
அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு


Thursday, July 21, 2011

துணை


இருட்டு பழகி
சாம்பல் பூத்திருந்த போது 
கரிய திரை கிழித்து
வாசல் வழி 
இருண்ட அறைக்குள்
அடர்ந்த நிறத்தொரு பூனை
தலை நுழைத்து
பின் உடல் நுழைத்தது 
இருளைத் தற்காலிகமாய் வெளியேற்றி

திரை மீண்ட போது 
பச்சை நிறத்து இரு 
ஒளிப்புள்ளிகள் வெளியில்!

Tuesday, July 19, 2011

விடை இல்லாதவை


கேள்விகள் விழுந்து
கேள்விகள் முளைக்கும் வனம் 

கேள்விகள்..கேள்விகள் 
சந்திக்கு முடியாத கேள்விகள்
சந்தித்த பின்னும் விடை காண முடியாக் கேள்விகள்

சீழ் பிடித்த புண் கிழித்து
புழுக்களும் நிணமும் கொட்ட கொட்ட
காட்சியாக்குபவை சில

என்றோ விழுந்து
கன்றிய வீக்கம் தொட்டு
உத்தடம் தருபவை சில

வெளி மொத்தம் 
ஒடுங்கிய புள்ளியில் 
ஊசலாடுபவை சில

ஆக இருண்ட குகையில்
வந்த முதல் வெளிச்சமெனச் சில

பூமி கீறிய 
புல்லெனச் சில

புதைந்து முளையா 
விதையாகச் சில

கரிய இரவில்
மின்மினி என 
அழகு காட்டுபபவை சில

கேள்விகள் இவை
கேள்விகள் மட்டுமே
எப்போதைக்கும்!






Monday, June 27, 2011

ஒன்றே

ஒரு விதை.
ஒரு மண்.

மண் தோன்றிய போதே
விதை இருந்ததா?
மண் தோன்றிய பிறகு
விதை விழுந்ததா?

விதை முளைத்து
விதைகளாய்ப் பிறந்தன
மண் எங்கும்
விதை விதை

மண் வேறு விதை வேறா?
இங்கு விதையே மண்
மண்ணே விதை!

Sunday, June 26, 2011

நடை

விழுந்து
எழுந்து
நடைபழகத்தான்
ஆசை எனக்கு!

முன்னின்று எனை நோக்கி
கைகொட்டி வாவென்று அழைக்குமுன் 
ஒவ்வொரு முழுமையான எட்டுக்கும்
இரண்டு மூன்று எட்டுகள் வேண்டும் எனக்கு!

பின் நகராதது போல் பின் நகருவாய்.
ஒரு எட்டுபோல் அரை எட்டுகளும் வைக்கத் தெரியும் உனக்கு
எதை எப்போது செய்கிறாய் என்பது தெரிவதில்லை.
அவை என்னை மேலும்
முன் நகர்த்துவதற்கான
உன் யுத்திகள்!

சிலர்
என் பக்கங்களில் நின்று
விரல் பிடிக்கச் சொல்கிறார்கள்
பிடிக்காது போனால்
நீ என்னை ஈர்த்து கொண்டதாக அங்கலாய்கிறார்கள்

நான் தேர்ந்து கொண்டபின்
உன்னை நோக்கி நடக்கிறேன்

அவர்கள் அறிவதில்லை
நான் நடக்க விரும்புவது
எனக்கான நடையை!

சிலர்
என் பாதைகளை
முடிவு செய்ய முயற்சிக்கிறார்கள்.

இலக்கு என்னவென்று
தெரிந்தால் அல்லவா
பாதையை முடிவு செய்வது!

ஒன்றை நம்புவது
தெரிந்து கொண்டதாகாதே?

Monday, June 6, 2011

மன்னிப்பு!

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

உன்னால்
தவறுகளை
மறக்கமுடியும்!

ஆறு
ஓடி ஓடி
கடலோடு
சேர்வது
போல்

நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உணர்வுகள் உன் நீர்க்கால்கள்.

நான் உதிர்க்கும்
கசடுகள்
பாரமாய் விழும்
ஒவ்வொருமுறையும்
அதைக் கடத்திவிட்டு
மீண்டும் மீண்டும்
உன் பூரணத்தூய்மையோடு
என்னைச் சந்திக்க
உன்னால் முடிகிறது!

நீ கலங்கமற்று இருக்கிறாய்!

எதையோ கேட்டு
அழுது
உறங்கிய குழந்தை
விடியும் போது
நம்
கழுத்து கட்டி
கிடக்குமே
அது போல்!


ஒற்றை
புன்னகை கீற்றைச் சுமந்து கொண்டு

இந்த பிரபஞ்ச
முழுமையையும்
எல்லா மானுடப் பிழைகளையும்
மன்னிப்பாய்  நீ!

ஆகையினால்,

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

என்னுடையவை ?


தேடி
இடம் பார்த்து
இருதயத்தில்
குரூரமாய்
மிகக்
குரூரமாய்
ஆழக் 
குத்தி விட்டு
பின்
சரி பார்ப்பது!



Sunday, May 8, 2011

பிரியாவிடைகள்

  
பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
மெல்ல
உறிஞ்சப்பட்டு
நாவில் கசந்து ஊர்ந்து
தொண்டைகுழி வழி
எரிய எரிய இறங்கும் 
கடைசி மிடற்று மது
சில பிரியாவிடைகள்.

மஞ்சளாய்க் காய்ந்து
பின்னர் 
செம்மஞ்சளாய் 
மெல்ல மெல்ல
நிறமிழந்து
வெண்மையாய் மாறி
சனம் சனமாய்
இருளுக்குள் விழுந்துபோகும்
பகலின்
பிரியாவிடை.

மின்னலாகக் கீறி
வானம் உடைத்து
இடித்து அலறி
சோவெனக் கொட்டி
பெருகி 
ஓடி
ஓய்ந்து போனவை
சில பிரியாவிடைகள்.

இச்சித்து 
விரும்பி
அருந்தி
ஆசை ஆசையாய்
அருந்தியது 
மற்றவர் அறியாவண்ணம் 
நடித்து
மிச்சம் வாய்த்த
கோப்பையின்
கடைசி வாய் தேநீர்
போல
ருசிக்கமுடியாதவை
சில பிரியாவிடைகள்.

பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
பிரிவுகள்
ஒன்றே போலும்.

பிரிவு

பற்றி உறிஞ்சும் கோடையில் 
தரை
வெளி நோக்கிச் சிந்தும்
கானல் நீர்.

இல்லாத ஒன்றை
இழந்து இழந்து
இழந்து கொண்டே 
இருத்தல்.

Wednesday, March 30, 2011

கூர்வாள்

கூரிய வாள் ஒன்று உண்டு
என்னிடம் 

அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.

என் இதயத் தசைக்கோளங்களுக்குள் 
சொருகி

ஒரு புறம் குத்தி
மறு புறம் வெளிவந்திருக்கும் 
கூர் முனையில் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
தட் தட் என
உதிரத் துளிகள்

தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொரு
தாளம் போல.





Wednesday, January 12, 2011

மார்கழிப் புலர் காலைப் பொழுது!

இன்று மதிப்பிற்குரிய சுசீலா அம்மா வின் 'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக.... பதிவினைப் படித்த பொழுது, வெருண்டு கிடக்கும் புழுதிக் காட்டில் விழும் முதல் மழை கிளரிவிடம் மண் வாசனை போல நினைவுகள் எழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை. நன்றி அம்மா தூண்டுதலுக்கு.

ஸ்ரீவில்லிப்புத்தூரை  பிறந்த இடமாய்க் கொண்டதற்கு என்றென்றும் பெருமை கொள்கிறேன் !

ஸ்ரீவில்லிப்புத்தூரை விட்டு வேறிடத்தில் தங்கி இருப்பது நான்கு மார்கழிகள்  ஆகத்தான். அனால் நான்கு யுகங்களைப் போல் உணர்கிறேன்.

உங்களுக்கு எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால்  என்ன சித்திரம் மனம் எழுமோ  தெரிய வில்லை. என் மனமெழும் முதற்ச் சித்திரம், பனி பெய்யும் மார்கழி மாதம் தான்.
'மாதங்களில் நான் மார்கழி - கீதையில் கண்ணன்.  என் மனவிரிவில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அது ஆண்டாள் தான். அவள் பாசுரங்கள் தான்.

சிறுவயதுகளில் பாசுரம் அறியாமல்  திருப்பாவை யும்  அறியாமல், என் *ஆச்சியின் கரம் பிடித்து பனி சிந்தச் சிந்த நடந்து சென்ற மார்கழியின் காலைப் பொழுதுகள் நான் என்றென்றைக்கும் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கும் அபூர்வ பொக்கிஷங்கள். ஒவ்வொரு ஆங்கிலப்  புத்தாண்டும் விடிந்தது சிறு பூவிரிதலைக் கண்ணுற்றது போல மனம் நிறைந்து கிடக்கின்றன மார்கழிப் பனி சிந்த. வாசலில் கோலமிட்ட ஆச்சிக்கு ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்து எழுதக் கற்பித்தது முதல் பக்கத்துக்கு வீட்டு அத்தை Prosperous New year என்பதை  Phospherous New Year என்று எழுதியதை திருத்தியது வரை எல்லாம் அழியா நினைவுத் தடங்களாய்.

தொடக்கப்  பதின் வயதுகளில் அகப்பட்டதை எல்லாம் வாசிக்கத் தொடங்கிய பொழுதுகளில் திருப்பாவை வாசித்தது ஒரு விதமான சந்தச் சுவையை மட்டும் தான் தந்தது என்றாலும், புரிந்து கொள்ள இயலாவிட்டாலும் மழலைச் சொற்கள் நமக்குள் தூண்டிவிடும் மகிழ்ச்சி நரம்புகள் நுணுக்கமானவை.

தமிழ் பகுத்தறிய அறிந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பாவையின் பொருள் புரியத் தொடங்கிய போது  பரவிய புல் வெளியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக தலை காட்டும் பூக்கள் எந்தனை பிரமிப்பைத் தரக்கூடும் என்று உணர்ந்த சமயங்கள்.

பின்னொருநாள் உறவினர் வீட்டில் அமர்ந்திருந்த பொழுது தற்செயலாகக் கையில் கிடைத்து திருப்பாவைப்  பதிப்பு வாசிக்கையில் மூடிய மேகம் விலக நிலவு பிறந்தது போல் "குத்து விளக்கெரிய .."  பாசுரத்தின் பொருள் விளங்கியது ஒரு மெல்லிய அதிர்ச்சி, ஒரு பதிலும் கூறாமல் உறவினர் வீடு விட்டு வந்து விட்டேன். ஒரு சிறிய திருப்பம் அது. நான் அன்று வரை கண்டு வந்த ஆண்டாள் விலக அதன்  உள்ளிருந்து பிறந்து வந்த ஒரு பெண்ணாக என்னை ஆண்டாள் தமிழாக.

தேடித் தேடித் வாசித்தேன் நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும். மிக நல்ல தொடக்கம் அது. நாள் முழுவதும் சிந்தித்திருக்கிறேன் 'கற்பூரம் நாறுமோ வையும்' 'குத்து விளக்கையும்"

அந்த தொடக்கம்  நிகழாது போயிருந்தால் இந்த அளவேனும் தமிழ் படித்தமை நிகழாது போயிருக்கம். அதன் இழப்பு என்னவென்பது? நான் இன்று காணும், உணரும் வாழ்வின் எதிர்ப் பதமாய்ப்  போயிருக்கும். என் வாழ்வில் நிறைவு இருந்திருக்கலாம் அனால் அழமற்றதாய் ஆகி இருக்கும்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும் விரிக்க ஒரு காட்சி போல் விரிவன. நல்ல ஒரு ஒளிக் கலைஞர் வாசிக்கும் பொழுது அந்த பாசுரம் ஒரு காட்சிப்   புடவையாக விரியதக்கன.

காலை என்ற நிலை தெரியும். சிறு காலைப் பொழுதும் புரிகிறது. சிற்றம் சிறு காலை என்பது காலை என்று போதினுள் நுழையும் நுண் தருணத்தை குறித்திருப்பாளோ? என்று வியந்திருக்கிறேன். இன்று சுசீலா அம்மாவின்  பதிவு படித்த போது நான் உறுதிப்படுத்திக்கொண்டது அதை தான்.

மார்கழியின் நாள்களில் முன் பகற்போதுகளிலும் நிலவு தெரியும். "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்"  வரியின் பொருள் யாரோ விரித்துச் சொன்னபோது. இது அறிவியல், புரிந்து கொண்டேன். பின் இரவில் உதித்து முன்பகல் வரை காணும் நிலவு மார்கழி நிலவு.

ஆழிமழைக் கண்ணா மீண்டும்  மிக எளிய அறிவியல்.

'குத்து விளக்கு எரிய கோட்டுக்கால் காட்டின் மேல் ' ஒரு இயல் மனதின் விரகத்தில் பிறந்து மென் இயல்பு. கோபம்.

நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் அளவு கடந்த அன்பிற் பிறந்தச்  சலிப்பு.

இவ்வரியை பொருள் கொள்ளும் போதும் சற்றே கூட்டி "வாய் திறவாய்" என்று கேட்கிறாளே? ஒருவேளை மலர் மார்பன் நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்தது அவன் வாயைத்தனோ? (தவறாக பட்டதென்றால் தவிர்த்துவிடவும்)

எல்லே எனத்தொடங்கும் பாசுரம்; வட்டார வழக்குகளை பதிவு செய்த முதல் ஆசிரியை.
இன்றும் தென் தமிழகத்தில் சமவயதுடையவர்களையும் இளையவர்களையும் விழிக்க உபயோகிக்கும் சொல் 'ஏலே'

'பையத் துயின்ற பரமனடி பாடி' அறிதுயிலைப் *பையத் துயின்றான் என்கிறாள் கோதை. 'பையப் போ', 'பையச்  சாப்பிட'  யாரேனும் நடக்கையில் தடுமாறினால் என் தெருவின் முதியவர் இயல்பாகச் சொல்லும் வாக்கியம்  'பைய பார்த்து போ வெள்ள" பைய என்ற சொல்லு மெல்ல அல்லது மெதுவாக என்று பொருள் படும்.

பின் குறிப்பு :
         *ஆச்சி - தென் தமிழகத்தின் சில பகுதிகளில்(திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் ) சில சமூகங்களுக்குள் பாட்டியை விளிக்க உபயோகப்படுத்தும் சொல்லு. செட்டிநாடு வழக்கில் உள்ள ஆச்சி அல்ல.
       *பைய - மெல்ல அல்லது மெதுவாக என்ற பொருளில் உபோயோகப்படுத்தபடும் சொல்.

Wednesday, January 5, 2011

புத்தகப்புழு நான்!

சொல்கிறார்கள்..
அறிவிலிகள்!

புத்தகப் புழுவாம்.

புத்தகங்களை
அறியாது போயிருந்தால்

உண்டு
செரித்து
வெளியேற்றி
மாலும்

வெற்று புழுவாய்ப்
போயிருப்பேன்!