Tuesday, December 22, 2009

கவிதை 3: பக்கத்தில் நீ...

நிலவில்லா இரவு
ஒரேஒரு விண்மீன்
சலசலக்கும் ஓடை
பக்கத்தில் நீ.

தூரத்து விளக்கு
கரைதீண்டும் அலை
ஒற்றைப் படகு
பக்கத்தில் நீ.

அதிகாலை வெளிச்சம்
அணில்பேசும் சத்தம்
நம்வீட்டுக் கொல்லை
பக்கத்தில் நீ.

முற்றத்துக் கோலம்
முல்லைப்பூப் பந்தல்
மேகத்தின் முதற்துளி
பக்கத்தில் நீ.


எதிர்பார்த்த முத்தம்
எதிர்பாராக் கண்ணீர்
அரவணைக்க நான்
தோள்சாய நீ!

Saturday, August 15, 2009

கவிதை 2

என் கவிதைகளில்
எப்போதாவது வரும்
எழுத்துப் பிழைகளும்
எப்போதும் வருகின்ற
நீயும்தான்
அழகானவைகள்..

Saturday, July 18, 2009

கவிதைக் கிறுக்கல்கள்

மிகுந்த கால இடைவேளைக்கு பிறகு இன்றுதான் பதிவிடுன்கின்றேன். இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. விடு மாற்றம் செய்ய வேண்டி இணையம் எங்கள் அறையில் தற்காலிகமாக துண்டிக்க பட்டிருந்தது. மீண்டும் இருவாரங்களுக்கு முன்புதான் இணையம் தொடர்பு கிடைத்தது. மேலும் கடந்த வார இறுதி நாட்களும் நான் என் சொந்த ஊருக்கு சென்றிந்தேன். எனவே பதிவிடத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

இந்த பதிவில் சமீபத்தில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு.
இதுவரைக்கும் கவிதை என்று நான் எழுதியவைகளை, நான் மட்டும் படிப்பதற்காகவே வைத்திருந்தேன். என்னை சுற்றி நிகழ்பவற்றினால் எனக்குள் எழும் மன எழுச்சிகளை பதிவு
செய்யும் வடிவமாய் அவற்றைப் பார்கின்றேன். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னைத் தவிர மற்றவர்களின் பார்வை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் சிறிய ஆசை(பேராசையோ ?)

கவிதை-1

' தாழம் பூவே வாசம் வீசு '
- பாலுவின் குரல்,

நீர்க்குழாயின் தண்ணீர் சீறி
தரை தொடும் ஓசை,

வானம் கொட்டும்
இடி முரசு,

ஒற்றை நொடியில்
தற்செயலாய்
ஒரு இசைக்கலவை

மின்னழுத்த வேறுபாட்டால்
நின்று மீண்டும்
வானொலி தொடங்கிய
இடைவேளையில்......

கோடை மழை
தரை கொட்டும்
அந்தத் தருணம்.

Saturday, June 20, 2009

மத்தகம் - படித்ததில் பிடித்தது

ஜெயமோகன்,

நலமா?
ஆஸ்திரேலியப் பயணம் நல்ல விதமாக இருக்குமென்று நினைக்கிறேன். மத்தகம் படித்துவிட்டேன். முடிவு என் கண்களை கலங்கச் செய்து விட்டது. அந்த உணர்வுகளை முழுதாய் வடிக்க எனக்கு வார்த்தைகள் சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கால்களைத் தூக்கி பரமனை தன் மேல் ஏற அனுமதிக்கும் போது கேசவனின் மன நிலை என்னவாக இருந்திருக்குமோ அந்த நிலை நமக்குள்ளும் ஒருநொடி உருவாகி நம்மையும் தாக்கத்தான் செய்கிறது.

யானை மிகவும் பலம் பொருந்திய விலங்கு, இருந்தும் அவை மனிதருக்குக் கட்டுப்பட்டு இயங்கும் தன்மை எனக்கு மிகுந்த வியப்பைத் தரும். அனால் அவை தாங்கள் விரும்பினால் மட்டுமே மனிதருக்குக் கட்டுப்படுகின்றன. ஆனால் மனிதன் கொண்டியங்கும் குணமும் இயல்பும் பல நேரம் விசித்திரமானது. அந்த குரூரம் , கொடுமை அந்த யானைப் பாகன் வழியாக படம் பிடித்துக் கட்டப்பட்டுள்ளது.

விலங்குகள் எப்பொழுதும் தூய்மையானவை. தங்கள் போக்கிலேயே வாழ்கின்றன. அவை மற்ற விலங்குகளை துன்புறுத்துவதில்லை. உணவுக்காகவோ, உடலத் தேவைக்காகவோ அல்லது தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ மட்டுமே தாக்குகின்றன(விதிவிலக்கு இருக்கலாம்). மனிதன் மட்டுமே மற்றவர்களை எதோ ஒரு விதத்தில் தாக்கிக் கொண்டிருப்பதின் மூலமே தான் இருப்பதை நிலை நிறுத்திக்கொள்ள விழைகிறான்.

யானை நடந்து வரும் தோரனையை தாங்கள் விவரித்திருந்த விதம் அந்த காட்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கு என்னையும் அழைத்து சென்று விட்டது. திருவட்டாரில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கேக் கோட்டை வரைக்கும் செல்லும் பாதை மிக அழகைப் படம் பிடித்து காட்டப்பட்டு இருந்தது .

நான் சில மாத காலங்கள் திருவனந்தபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். அக்காலங்களில் நான் நாகர்கோயில் - திருநெல்வேலி வழியாகத்தான் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் குழித்துரையும், கழியக்காவிளை வழியாகவும் தான் பயணம் செய்தாக வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு யானைப் பாகனாக அதே வழித்தடத்தில் பயணித்தது போல் இருந்தது.

நாம் புழங்கிய இடம் அல்லது கடந்து சென்ற இடங்கள் கதைக்களமாய் அமைந்து இருக்கும் படைப்புகளை படிக்கும் பொழுது அந்த அனுபவம் அந்தப் படைப்பை உள்வாங்கிக் கொள்ள மேலும் ஒரு ஈர்ப்பாக அமைந்து விடுகிறதோ? இதே அனுபவம் 'உடையார்' இல் தஞ்சை பெரிய கோயில் படித்து போதும் அமைந்ததுண்டு.

தவறு செய்தல் மனித இயல்பு. நான் இங்கு குறிப்பிட்டவற்றில் தவறுகள் இருக்கலாம், தவறு செய்தல்தான் ஒன்றைச் சரியாகச் செய்வதற்கு வாய்ப்பாய் அமைகிறது. எனினும் என் தவறுகளைப் பொருத்து ஆள்க. (சுட்டிக் காட்டபடும் பொழுது கண்டிப்பாக திருத்திக் கொள்ளவேன்).

நன்றி,
தங்கள் வாசகன்,
சுந்தரவடிவேலன்.

அன்புள்ள சுந்தரவடிவேலன்

நலம்தானே? மத்தகம் குறித்த உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். அந்தக்கதை மத்தகம் குறித்தது. உயர்ந்த- சிம்மாசனம் போன்ற தலை. அதற்கு மத்தகம் என்ற் பெயர். மத்து + அகம். மதத்தை உள்ளே வைத்திருக்கும் இடம். அதிகாரம் கொண்ட தலை என்பதற்கு பொருத்தமான பெயர் அது. தமிழின் அருமைஅயன சொல்லாட்சிகளில் ஒன்று. அந்த மத்தகம் தாழ்ந்து இன்னொன்றை ஏற்பதன் அந்தக் கணமே அந்நாவல்
ஜெ http://jeyamohan.in/?p=927


Wednesday, June 10, 2009

****அஜிஷுக்கு நானும் Fan*******

உங்களில் பல பேருக்கு அஜீஷைப் பற்றி தெரிந்திருக்கும். Airtel Super Singer பட்டத்தை வென்றவர்தான்.

இசையை பொறுத்தவரை நான் ஒரு அறிவிலி தான், இருப்பினும் இசை கேட்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. என் மனதுக்கு பிடித்தவை என்ற வகையில் மட்டுமே பின் வருவனவற்றை குறிப்பிடுகின்றேன். இசை தெரியாதவனாக இருந்தாலும் இசை தானாய் எனக்குள் ஏற்படுத்திய மன எழுட்சிகளை கூற விரும்புகிறேன். இவை விமர்சனம் அல்ல, எனக்கு பிடித்தவை அவ்வளவே.

நான் சென்னையில் நண்பர்களுடன் தங்கியுள்ளேன். எங்கள் அறையில் தொலைக்காட்சி இல்லை. நான் விஜய் டிவியின் ரசிகன் என்று சொல்லலாம். இதற்கு முன்னர் வந்த Airtel Super Singer மற்றும் Airtel Super Singer ஜூனியர் இரண்டையும் முழுவதும் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை சென்னையில் இருப்பதால் என்னால் பார்க்க இயலவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஊருக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். தொடர்ந்து நிலவரங்களை என் தாயிடமிருந்து மொபைல் வழியாகத் அறிந்து கொண்டிருந்தேன்.

சிலநேரம் ஒரு நாளின் முழு நிகழ்ட்சியையே மொபைல் வழியாகவே கேட்டதுண்டு. அவ்வாறு நான் கேட்டவரையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அஜீஸ். பிரசன்னாவின் உற்சாகம் யாரையும் தொற்றிகொள்ளும் தன்மையது. ரேணுவின் குரலில் உள்ள குழைவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் தந்தை ரேணுவின் மிகத்தீவிரமான ரசிகர் ஆகிவிட்டார். ராகினி ஸ்ரீ என் தாயின் விருப்பதுக்குரியவர். என் தங்கையின் விருப்புமான பாடகர் அஜீஸ் தான்.

அதிலும் அஜீஷின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Dedication Round இல் அஜீஸ் பாடிய 'உயிரும் நீயே' மற்றும் Unplugged round இல் 'ஸ்டீபன் தேவசி' இன் பியானோவுடன் பாடிய 'தொடத் தொட மலர்ந்ததென்ன' இரண்டும் என்னை அவரை நோக்கி வசிகரித்தன.


'உனக்கென்ன மேல நின்றால் பாடல் கெட்ட பொழுத எனக்குள் எழுந்த மன எழுச்சிகளை பற்றி சொல்லவேண்டுமென்றால் நானும் இசைக் கலைஞனாக இருந்தால் மட்டுமே கூற இயலும். 'பாட்டும் நானே' பாடிய பொது சுதா ரகுநாதனே 'பாட்டும் நீயே பாவமும் நீயே' என்றே பாராட்டிவிட்டாரே அதற்கு மேல் என்ன சொல்ல முடியும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை அந்த பாடல் மிகக் கடினமான ஒன்று.

இறுதி சுற்று நிகழ்ச்சி முழுவதையும் கைபேசி முழமாகவே கேட்டேன். இறுதி சுற்றில் பாடிய போட்டியாளர்கள் மூவருமே மிகச்சிறந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை. ரேனு பாடிய இரண்டு பாடல்களுமே மிக அழகாக இருந்தன. ரவி பாடிய 'கல்லை மட்டும் கண்டால் ' மிகவும் பிடித்திருந்தது.

அஜீஷைப் பற்றி சொல்லவே வேண்டாம் 'சங்கீத ஜாதிமுல்லை' பாடிய போதே அவர்தான் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் வலுக்க தொடங்கிவிட்டது. அவருக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை . நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அவருக்காக.


மனமார்ந்த வாழ்த்துக்கள் அஜீஸ் !!!!

Friday, June 5, 2009

இரவல் வெளிச்சம்...

இரவல் வெளிச்சம்...

பயணங்கள் எப்பொழுதுமே நான் விரும்புவனவற்றுள் ஒன்று. பயணத்தை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. பயணத்தில் இலக்கை விட பயணமே மிகச் சிறந்தது. பயணம் என்பது உயிர் குலத்தின் இயல்பு. பூமியே பயணித்துக் கொண்டு இருக்கின்ர்றது. ஏன், பிரபாஞ்சமும் கூட. வெளி ஒன்றுதான் பயணம் செய்யாதது.

பறவைகளின், விலங்குகளின் இடப்பெயர்வு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அவை பல மனிதர்களையும் விட தங்கள் வாழ்நாளில் அதிக தூரங்களயே கடந்து விடுகின்றன. வாழ்க்கை என்பதும் பயணம் தானே. அவற்றில் நாம் எதிர் கொள்பவையே அனுபவங்கள். வாழ்கைப் பயணத்தில் இலக்கு முக்கியம் அல்ல, பயணம் மட்டுமே அங்கு முக்கியமானதாக இருக்கிறது. இலக்கற்ற பயணம் தான் வாழ்க்கையோ? இல்லை இலக்கென்று ஒன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தேடித்தான் பயணிக்கின்றோமோ?

பேருந்துகளில் பயணம் செய்கையில் என்னால் தூங்க இயலுவதும் இல்லை. சென்ற வெள்ளிக்கிழமை (05/06/2009) இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் போயிருந்தேன். பேருந்துப் பயணம் தான். பொதுவாகச் சென்னையிலிருந்து இரவில் கிளம்பும் பேருந்துகள் இரவு உணவுக்காக திண்டிவனம் அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவார்கள். அதுவரைக்கும் மட்டுமே பேருந்துக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். உணவு இடைவேளைக்குப் பின்னர் விளக்குகள் அணைக்க பட்டுவிடும்.

பயணிகளும் உறக்கத்தில் மூழ்கி விடுவார்கள். பேருந்தில் விளக்கு அணைக்கும் வரை ஏதேனும் புத்தகம் வாசிப்பது என் வழக்கம். ஒளியற்ற பேருந்தில் பயணிக்கும் போது பயணத்தையே வாசிக்கத் துவங்கி விடுவேன். நெடுஞ்சாலை ஓரங்களில் ஆங்காங்கே மின் கம்ப விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், பேருந்து விரைவாக நகர்ந்து போகும் பொழுது , அந்த விளக்குகளின் ஒளிக்கற்றைகள் ஜன்னல் வழியாக ஒரு கோணத்தில் நுழைந்து, ஒரு அறைவட்டதினுள் அடங்கும் அத்தனை கோணங்களையும் உருவாக்கி நகர்ந்து செல்லும்.

வைரமுத்து அவர்கள் 'கன்னத்தில் முத்தமிட்டால்' பாடலில் 'இழைத்த கவிதை நீ , இரவல் வெளிச்சம் நீ என்று குறிப்பிடுவர். அந்த வரிகளை முதன் முதலில் கேட்ட
பொழுது என் மனக் கண்ணுக்குள் உருவான பிம்பம் ஒளியற்ற இரவுப் பேருந்துக்குள் சாலை ஓர ஒற்றை விளக்கு உருவாக்கும் அரைவட்டமாகத் தான் இருந்தது. பக்கத்து வீட்டு அல்லது தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னல் வழியாகப் பயணித்து ஜன்னல் கம்பிகளின் நிழல்களுடன் நாமது வீட்டின் தரையில் விழுமே அந்த வெளிச்சம் அதுவும் இரவல் தானே. மின் வெட்டு இரவுகளில் தெருவில் செல்லும் வாகனங்களின் விளக்கொளி நமது வீட்டின் கதவிடுக்குவழியாக உட்புகுமே அந்த வெளிச்சம் என இன்னும் பல.


ஒருவகையில் சிந்தித்து பார்த்தால் , பூமிக்கு ஒளி என்பதே இரவல்தானே. சூரியன்
பூமிக்காக ஒன்றும் ஒளியைச் சிந்திக்கொண்டிருக்கவில்லையே. சூரியன் ஒளியாகவே இருக்கிறது. அதன் கதிர்கள் பூமியை தீண்டுகிறது அவ்வளவே. ஒளி , பூமிக்கு தரப்பட்ட இரவல்.

ஒளி என்பது தற்காலிகம் ஆனது கூட. இருள் என்பதே முழுமையானது, நிலையானது. ஒளி ஒரு கால இடைவெளிக்குள் உருவாகி, அதற்குள் அழிந்தும்போகும் . அனால் , இருளும் , காலமும் ஒன்றாய் ஒரே முடிவிலியில் தொடங்கி மற்றொரு முடிவிலியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. முடிவில்லாத பயணம்.
Thursday, June 4, 2009

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி...
வாசிப்பு உலகத்தின் முதல் நிலை படிக்கட்டுகளில் ஏற விரும்புகின்ற 'வாசிப்பு பழகுனர்' நான்.

என் தந்தையின் துண்டுதளால் தான், நான் முதலில் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் என்னை வாசிக்க சொன்ன முதல் புத்தகம் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்'
அதன் பின்னர்தான் வாசிப்பதை என் வாழ்கையின் மிக முக்கிய பகுதியாக செய்து கொண்டேன்.
தமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த புத்த்கங்களை வாசித்ததுண்டு, தமிழர்களின் கட்டட கலை எபோழுதும் என்னை கவர்ந்த விஷயம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவன் அதனாலோ, என்னவோ 'ஆண்டாள்' மேல் தீராத விருப்பம் உண்டு.
அவளுடைய 'குத்து விளக்கு', 'ஆழி மழை கண்ணனும் ' எபோழுதும் என்னை வசிகரித்தவை.
'எல்லே இளங்கிளியே' பாட்டை கூறி 'ஏலே' என்று நாம் தற்காலத்தில் புழங்கும் வார்த்தையை ( வட்டார வழக்கு ) பற்றி நண்பர்களிடம் பெருமைபட்டதுண்டு. அபிராமி பட்டரின் 'இடங்கொண்டு விம்மி' பாடல் எத்தனையோ நாட்கள் சிந்தையை நிறைத்ததுண்டு .

சாண்டில்யனை வெறித் தனமாய் வாசித்ததுண்டு. பாலாகுமரன் எழுதிய 'உடையார்' என்னை கவர்ந்து ஒரு சிறந்த படைப்பு. தி . ஜ வின் 'மோக முள்' பலமுறை வாசித்திருகின்றேன் . பாரதி யை படிக்காமல் தமிழ் படித்ததாய் சொல்லி கொள்ள முடியாது.

பள்ளி காலங்களில் எழுது வதில் தனித்த விருப்பம் இருந்தது. கவிதை என்ற பெயரில் நானும் கிறுக்கியதுண்டு. அனால் சில மன வியல் காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒன்றும் தவறாகி விடவில்லை. சீறிய சிந்தனை உள்ள மனிதன் அல்ல நான். மிகச் சாதரணமானவன்.

எனினும் என்றுமே என் வாசிப்பை கை விட்டதில்லை. எதிர்காலத்தில் என்னை ஒரு நல்ல 'வாசகனாய்' எனக்கு நானே அடையாளப் படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விரும்பும் ஒற்றை ஆசையாய் இருக்க முடியும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றேன்.

மற்ற வகையில் நான் ஒரு சாப்ட்வேர் தொழிலாளி. சென்னையில் வாசம். தாய் தந்தையர் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஒரு சகோதரி உண்டு, இளையவள். எனக்கு இலக்கிய விவாதங்களுக்கு கிடைத்த மிக நல்ல தோழி. பாரதியை பற்றியும், தி . ஜ வின் மோகமுள் பற்றியும், சாண்டில்யன் , கல்கி பற்றியும் மணிக் கணக்கில் பேசியது உண்டு.

என் துர்அதிர்சடமோ என்னோவோ, அவளைத் தவிர இலக்கிய சார்ந்த நண்பர்கள் எனக்கு அவ்வளவாய் அமையவும் இல்லை. சில நேரம் என் நண்பர்களிடம் எனக்கு தெரிந்த இலக்கியம் பேசி கஷ்டபடுதியதும் உண்டு.

ஒன்றை மட்டும் எம்போழுதும் மிகத் தீவரமாய் நம்பிவருகின்றேன் அது ' வாசிப்பும், இசை கேட்பதும் ' தான் என் வாழ்வில் நான் செய்து வரும் பயுன் உள்ள செயல்கள். மற்றவை அனைத்தும் அவை போக்கில் வந்து அவை போக்கிலயே அழிந்து போகும் நீர்க்குமிழிகள். வாசிப்பு என்னும் அலையோடு வந்து அலையோடே அழிந்துவிடுகின்றன.

'வாசித்த பொழுதுகள் மட்டுமே' என் வாழ்வில் வாழ்ந்து பொழுதுகளாய்க் கணக்கிடுகின்றேன். வாசிப்பு மட்டுமே என்னை 'இருத்தல்' என்ற நிலையில் இருந்து 'வாழ்தல்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றது.

அதனால் என்னால் இதை வசிக்கலாம், வேண்டாம் என்ற பாகுபாடின்றி எதையும் வசிக்க முடிகின்றது. தவறாகவும் இருக்கலாம். ஏன் என்றால்? குறிப்பட்ட சிலவற்றை மட்டும் முழுதாய் படித்து புலமை அடைதல் என்பது எனக்கு சாத்தியப்படாத போகிறதோ என்ற அச்சமுண்டு.

வலைகளின் முலமாய் பலவும் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றதே என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. பொழுது தான் கிடைப்பதில்லை.

புத்தகங்கள் என்னிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே விளங்குகிறது. பொதுவாக வேலைக்கான நேர்காணலில் 'உங்களை பற்றி சொல்லுங்கள்' என்று கேட்க படுவதுண்டு. இந்த கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்ட போதெல்லாம் என்னை பற்றியவைகளாய் இருப்பவைகள் எல்லாம் என்
வாசிப்பு பற்றியவைகளாய் மட்டுமே இருக்கின்றன.

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கியதின் தாக்கத்தால், மீண்டும் எழுத்தார்வம் உண்டாகி எழுதத்தொடங்கியுள்ளேன்.

மேலும் என் இசை குறித்த விருப்பங்களை எழுதினால் இந்த பத்தி மிக பெரியதாகிவிடும். இனி வரும் பகுதிகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோமே.

சுழியம்

சுழியம்....
எதுவுமற்றத்தைக் குறிக்கும் குறியீடு..
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பிரபஞ்சத்தின் வடிவமும் கூட..

எண்களில் தனித்த வடிவம் கொண்ட ஒரே எண். உயிர் குலத்தின் அனைத்து உயிர் வித்துகளும் '0' வடிவம் தான்.

என்னை என்றுமே வசிகரித்த எண். அதனாலேயே என் 'ப்லோக்' க்கு இதையே பெயராகத் தேர்ந்தெடுதேன்.

இந்த வலைப் பயணத் தொடக்கத்திற்கும் ஒரு வகையில் இதுவே காரணம். எந்த எண்ணின் முன்னால் சுழியம் வந்தாலும் அதற்குப் பொருள் இல்லை. அதே சமயம் எந்த எண்ணின் பின்பு வரும்போது அந்த எண்ணின் மதிப்பையும் சேர்த்தே பெற்றுக்கொள்ளும் சிறப்பு வாய்ந்தது.

மனிதனின் அனுபவமும் ஏதுமற்ற ஒரு சுழியத்தில் இருந்து தொடங்குவதுதான். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் நம்மை பற்றிய மதிப்பீடு என்பதே அந்த அனுபவம் சார்ந்தே கணக்கிடப் படுகிறது.

தொடக்கத்தில் சுழியம் போல் மதிப்பற்று இருந்த 'அனுபவமே' பின்னர் வாழ்க்கையின் மதிப்பீடாகா அமைந்து போவது விந்தைதான் அல்லவா.

எறும்பிற்கும் அனுபவங்கள் உண்டு. எந்த ஒரு மனிதனை விடவும் அவை மிகச் சிறந்த அனுபவங்களைக் கூட அடைந்திருக்கலாம்.

காலப் பெருவெள்ளத்தின், பிரபஞ்சத்தின் பரிமாணங்களோடு ஒப்பிட்டு பார்கையில் மனிதன் என்பவன் மிகச் சாதரணமானவன். அவன் அனுபவங்களே அவனை முழுமை அடையச் செய்கிறது.

அதைப்போல, சாதரணமானவனகிய நான் என் வாழ்வில் எதிர் கொண்டவற்றையும், இயல்பாக அவை எனக்குள் ஏற்படுத்திய எதிர் வினைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

என்னை போன்ற சக மனிதர்களின் அனுபவங்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இதன் பயன் என்ன என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

எழுந்து நிற்க விரும்பும் மழலை விழுவது என்பது இயல்புதானே. எழுவதற்கு பயிற்சியும் கூட.

நமக்குள் நடக்கத் தெரிந்தவர்கள் இருப்பீர்கள் நான் நடக்கவும் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டேன்...


'அறியாமை அறிந்து
அறிதல் தொடங்கும்
அறிந்தும் அறிந்தும்
அறியாமை எஞ்சும் - முற்றும்
அறிதல் என்பதும்
அறியாமை தானோ
அறியாமை இன்றேல்
அறிதலும் இல்லை!'