Friday, June 5, 2009

இரவல் வெளிச்சம்...

இரவல் வெளிச்சம்...

பயணங்கள் எப்பொழுதுமே நான் விரும்புவனவற்றுள் ஒன்று. பயணத்தை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. பயணத்தில் இலக்கை விட பயணமே மிகச் சிறந்தது. பயணம் என்பது உயிர் குலத்தின் இயல்பு. பூமியே பயணித்துக் கொண்டு இருக்கின்ர்றது. ஏன், பிரபாஞ்சமும் கூட. வெளி ஒன்றுதான் பயணம் செய்யாதது.

பறவைகளின், விலங்குகளின் இடப்பெயர்வு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அவை பல மனிதர்களையும் விட தங்கள் வாழ்நாளில் அதிக தூரங்களயே கடந்து விடுகின்றன. வாழ்க்கை என்பதும் பயணம் தானே. அவற்றில் நாம் எதிர் கொள்பவையே அனுபவங்கள். வாழ்கைப் பயணத்தில் இலக்கு முக்கியம் அல்ல, பயணம் மட்டுமே அங்கு முக்கியமானதாக இருக்கிறது. இலக்கற்ற பயணம் தான் வாழ்க்கையோ? இல்லை இலக்கென்று ஒன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தேடித்தான் பயணிக்கின்றோமோ?

பேருந்துகளில் பயணம் செய்கையில் என்னால் தூங்க இயலுவதும் இல்லை. சென்ற வெள்ளிக்கிழமை (05/06/2009) இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் போயிருந்தேன். பேருந்துப் பயணம் தான். பொதுவாகச் சென்னையிலிருந்து இரவில் கிளம்பும் பேருந்துகள் இரவு உணவுக்காக திண்டிவனம் அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவார்கள். அதுவரைக்கும் மட்டுமே பேருந்துக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். உணவு இடைவேளைக்குப் பின்னர் விளக்குகள் அணைக்க பட்டுவிடும்.

பயணிகளும் உறக்கத்தில் மூழ்கி விடுவார்கள். பேருந்தில் விளக்கு அணைக்கும் வரை ஏதேனும் புத்தகம் வாசிப்பது என் வழக்கம். ஒளியற்ற பேருந்தில் பயணிக்கும் போது பயணத்தையே வாசிக்கத் துவங்கி விடுவேன். நெடுஞ்சாலை ஓரங்களில் ஆங்காங்கே மின் கம்ப விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், பேருந்து விரைவாக நகர்ந்து போகும் பொழுது , அந்த விளக்குகளின் ஒளிக்கற்றைகள் ஜன்னல் வழியாக ஒரு கோணத்தில் நுழைந்து, ஒரு அறைவட்டதினுள் அடங்கும் அத்தனை கோணங்களையும் உருவாக்கி நகர்ந்து செல்லும்.

வைரமுத்து அவர்கள் 'கன்னத்தில் முத்தமிட்டால்' பாடலில் 'இழைத்த கவிதை நீ , இரவல் வெளிச்சம் நீ என்று குறிப்பிடுவர். அந்த வரிகளை முதன் முதலில் கேட்ட
பொழுது என் மனக் கண்ணுக்குள் உருவான பிம்பம் ஒளியற்ற இரவுப் பேருந்துக்குள் சாலை ஓர ஒற்றை விளக்கு உருவாக்கும் அரைவட்டமாகத் தான் இருந்தது. பக்கத்து வீட்டு அல்லது தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னல் வழியாகப் பயணித்து ஜன்னல் கம்பிகளின் நிழல்களுடன் நாமது வீட்டின் தரையில் விழுமே அந்த வெளிச்சம் அதுவும் இரவல் தானே. மின் வெட்டு இரவுகளில் தெருவில் செல்லும் வாகனங்களின் விளக்கொளி நமது வீட்டின் கதவிடுக்குவழியாக உட்புகுமே அந்த வெளிச்சம் என இன்னும் பல.


ஒருவகையில் சிந்தித்து பார்த்தால் , பூமிக்கு ஒளி என்பதே இரவல்தானே. சூரியன்
பூமிக்காக ஒன்றும் ஒளியைச் சிந்திக்கொண்டிருக்கவில்லையே. சூரியன் ஒளியாகவே இருக்கிறது. அதன் கதிர்கள் பூமியை தீண்டுகிறது அவ்வளவே. ஒளி , பூமிக்கு தரப்பட்ட இரவல்.

ஒளி என்பது தற்காலிகம் ஆனது கூட. இருள் என்பதே முழுமையானது, நிலையானது. ஒளி ஒரு கால இடைவெளிக்குள் உருவாகி, அதற்குள் அழிந்தும்போகும் . அனால் , இருளும் , காலமும் ஒன்றாய் ஒரே முடிவிலியில் தொடங்கி மற்றொரு முடிவிலியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. முடிவில்லாத பயணம்.




2 comments:

  1. nalla anupavaththai matrvarkalodu pakirinthuullieerkal nantru. naan unkal oor pakkaththu oor kaaranthaan. vazhththukkal

    enathu kalaisolai.blogspot.com padiththu ungkal karuththai therivikkavum.

    ReplyDelete
  2. thanks Bharathimohan, thankal valaithalaththai padikka thodangiyullen.

    ReplyDelete